Sunday, September 08, 2019

விதிப்படி பயணம்

விதிப்படி பயணம்

உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது. உனதுவாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே.

ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.

ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?

நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்ததே.

மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”
என்றார் வள்ளுவர்.

ஊழ் என்பது பூர்வ ஜன்மத்தையும், விதியையும் குறிக்கும்.

பூர்வ ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.
அதனை, ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றான் இளங்கோ.

போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.

ஆகவே விதியின் கோடுகள்தாம் உன்னை ஆட்சி செய்கின்றன என்பது, இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நீ எண்ணியது நடந்தாலும் நடக்காவிட்டாலும், எண்ணாதது நடந்தாலும், யாவும் உன் விதி ரேகைகளின் விளைவே.

முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.

“எல்லாவற்றுக்கும் கால நேரம் வர வேண்டும்” என்கிறார்களே இந்துக்கள், அதற்கு என்ன காரணம்?

இன்ன காரியங்கள், உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான்.

நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.

இரண்டாவது உலக யுத்தத்தின்போது, ஹிட்லருக்கு இருந்த வசதியும், ஆயுதப் பெருக்கமும் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.

ஒரே நாளில் போலந்தைப் பிடித்தான்.

வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லாவாகியாவைப் பிடித்தான்.

குண்டு போடாமலேயே பிரான்ஸைப் பிடித்தான்.

அவன் விரும்பியிருந்தால் ஐரோப்பாவையும், ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம்.

வெறும் வாய் வேட்டுக்களையே விட்டுக் கொண்டிருந்த சர்ச்சிலை, அவன் கனடாவுக்குத் துரத்தியடித்திருக்கலாம்.

(சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓடத் திட்டமிட்டிருந்தார்.)

அகில ஐரோப்பாவையும் பிடித்துவிட்டால், உலகத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக் காலனிகளாக இருந்த ஆசிய - ஆப்பிரிக்க , அரேபிய நாடுகள் - சுமார் எண்பது- குண்டுகள் போடாமலேயே அவன் கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும்.

இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதே.

ஆனால், விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சி புரிந்தது.

பிரிட்டனைக் ‘கோழி குஞ்சு’ என்று அவன் கேலி செய்துவிட்டு, ‘யானையைச் சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும் என்று சோவியத் யூனியனுக்குள் நுழைந்தான்.

‘அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப்படுகிறது’ என்று விதி சிரித்தது.

சோவியத் யூனியனின் பருவகாலத்தில் அவன் சிக்கிச் சிக்கி இழுபட அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களைத் தயார் செய்து கொண்டு விட்டன.

எச்சரிக்கையாக இருந்திராததால், உலகத்தையே ஆண்டிருக்கக்கூடிய ஹிட்லர், தன் பிணத்தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்துபோனான்.

எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பி விடும் விதி. ஹிட்லரின் ஆணவதையும் அழிவை நோக்கித் திருப்பிவிட்டது.

உலக வரலாறுகளை கூர்ந்து நோக்குங்கள்.

நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?

நினைப்பவன்தான் நீ. முடிப்பவன் அவன்.

இந்துக்களின் தத்துவத்தில் இது முக்கியமானது.

நம்முடைய லகான் இறைவன் கையிலே உள்ளது என்பதை, இந்துமதம்தான் வலியுறுத்துகிறது.

பிச்சைக்காரி ராணியான கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் அதிர்ஷ்டம் என்ற பெயரிலோ, துரதிர்ஷ்டம் என்ற பெயரிலோ விதியின் பரிசளிப்பு.

“ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே, இப்படி ஆகிவிட்டதே” என்று நீ பிரலாபித்துப் பயனில்லை.

“அப்படித்தான் ஆகும் என்று நீ ஜனிக்கும்போது எழுதப்பட்டிருக்கிறது.

ராமனையும் விதி ஆண்டது. சீதையையும் விதி ஆண்டது.

காமனையும் விதி ஆண்டது ரதியையும் விதி ஆண்டது.

சோழ நாட்டுக் கோவலனின் விதி. மாதவியின் மயக்கத்திலே இருந்தது.

கண்ணகியின் விதி மதுரையிலே இருந்தது.

பாண்டியன் நெடுஞ்செழியன் விதி, ஒரு காற்சிலம்பில் அடங்கியிருந்தது.

அலெக்சாண்டரின் விதி, பாபிலோனியாவில் முடிந்தது.

ஜூலியஸ் சீஸரின் விதி, சொந்த நண்பனின் கையிலே அடங்கியிருந்தது.

நெப்போலியனின் விதி, அவனது பேராசையிலே அடங்கியிருந்தது.

காந்திஜியின் விதி, கோட்ஸேயின் கைத்துப்பாக்கியில் அடங்கி இருந்தது.

அடிமைகள் கிளர்ந்து எழுந்ததும், ஆதிக்க வெறியர்கள் விழுந்து துடித்ததும், காலமறிந்து கடவுள் விதித்த விதி.

கடவுளே இல்லை என்று வாதிடுவோரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறைவன் ஏன் விதிக்கிறான்?

தங்கள் கொள்கைகள், தங்கள் கண் முன்னாலேயே தோல்வி அடைவதைக் கண்டு சாக வேண்டும் என்றுதான்!

உண்மையான பக்தி உள்ள சிலருக்கு ஆண்வன் ஏன் நீண்ட ஆயுளைத் தருகிறான்?

‘தாங்கள் பக்தி செலுத்தியது நியாயமே என்று அவர்களும், அவர்களைப் பார்த்துப் பிறரும் உணர்வதற்காகத்தான்.

இறைவன் விதியை ஒருவேடிக்கைக் கருவியாக வைத்திருக்கிறான்.

சக்தியும் சிவனும் பூமியில் பூமியில் பல வேடங்களில் பிறந்ததாக இந்துக் கதைகள் கூறுவது, இறைவன், தானும் விதிக்கு ஆட்பட்டு, அதன் சுமையை அனுபவிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.

அந்தக் கதைகளை வெறும் கதைகளாக நோக்காமல், இறைவனின் தத்துவங்களாக நோக்கினால், மானிடத் தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும்.

விதி - மதி ஆராய்ச்சியில் மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

அதை ஒரு கதையாக மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன்.

பிரவாகம்
-----------
ஞானி, பிரகதீஸ்வரர், திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார். அவர் பெரிய மகான், உண்மையிலேயே ஞானி. சிறுவயதிலே துறவு பூண்டவர்.

கல்மண்டபத்தின் வடக்கில் அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.

எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.

வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்த ஞானியார், ‘யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்’ என்று தெரிவித்தார்.

யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்ப்பார்த்தார்கள்.

மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.

நடுத்தர வயது; தீட்சண்யமான கண்கள்; பந்த பாசங்களில் அடிபட்டுத் தேறி வந்தது போன்ற ஒரு தெளிவு.

சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.

“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.

அவர் சொன்னார்:

“சுவாமி! விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்திருக்கின்றன. ‘விதியை மதியால் வெல்ல்லாம் என்றும், மதியை விதி வென்றுவிடும்’ என்றும், இரண்டு கருத்துக்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்”

கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.

மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.

மண்டபம் காலியாயிற்று.

இரண்டு நிமிஷங்கள் கழித்து, எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார். திபுதிபுவென்று எல்லோரும் ஓடி வந்து அமர்ந்தார்கள்.

ஞானியார் கேட்டார்.

“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்காந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?”

எல்லோரும் விழித்தார்கள்.

நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.

கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:

பாருங்கள், இந்தச சின்ன விஷயத்தில் கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.

கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!

இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”

கேள்வியாளர் கேட்டார்:

“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்: இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

ஞானியார் சொன்னார்:

“அறியாமையே விதியின் கைப்பாவை.

அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்து விட்டால், விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.”

கேள்வியாளர் கேட்டார்:

“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”

ஞானியார் சொன்னார்:

“இருக்கின்றன!

இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.

உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.

இந்தப் பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.

எபோது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.

அதற்கும் நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி”

கேள்வியாளர் கேட்டார்:

“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது எங்கிருந்து தொடங்குகிறது?”

ஞானியார் சொன்னார்:

சூன்யத்தில் நிர்ணயிக்கப்படுகின்றது; ஜனனத்தில் தொடங்குகிறது. தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்கள் எத்தனைபேர்? வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது. கோழை தோல்வியுற்றால், அது கோழைத் தனத்தால் கிடைத்து. ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பற்றாலோ, அவை விதியால் நிர்ணயிகப்பட்டவை! வரலாற்று நதியைத் தனி மனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை. விதியே அழைத்துச்சென்றிருக்கிறது

கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.

மாதர்களாலேயே ஆரம்பமான பிரஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!

ஒன்று நடைப்பெற்ற பின்னால், ‘கொஞ்சம் அப்படிச்செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!

மதி ஏன் தாமதமாகச்சிந்திக்கிறது?

விதி முந்திக்கொண்டு விட்டது!”

கேள்வியாளர் கேட்டார்:

“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக்கூடியது ஒன்றுமே இல்லையா?”

ஞானியார் சொன்னார்:

“இருக்கிறது!

பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.

அதைப்பள்ளம் என்று தெரிய வைத்தது விதி.

விதி வாசலைத் திறந்து கொடுத்தால் மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.

விதி வாசலை மூடிவிட்டால்,மதி அதிலே மோதிக் கொண்டு வேதனை அடைகிறது.

விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.

தந்தையைக்கொன்று சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சில நேரம் விதியை வென்றிருக்கலாம்.

ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்று விடுகிறது. நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாததை உறுதி பெறுவதும், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினாலே. அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.

சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவதால் வந்த மதி.

யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.

தொடக்கம் பலவீனமானால், முடிவு பலமாகிறது.

தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது!

தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

அப்படி யாராவது இருக்கிறார்களா?”

ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.

கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.

மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானியார் அமைதியாகக் கேட்டார்:

“உங்கள் மதி வேலை செய்யவில்லையா?”

கேள்வியாளர் அமர்ந்தார்.

ஞானியார் சொன்னார்:

ஜனனத்துக்கு முன்பும் மரணத்திற்குப் பின்பும், நாம் எங்கிருந்தோம், எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது. இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது. நான் துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று. காலை வெயிலில், நமது நிழல் நம் உயரத்தை விடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது. மதியத்தில் நம்மை விட அது கூனிக்குறுகி காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது. மாலையில் அது மீண்டும் உயரமாகிறது.

ஆனால் நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது. நம் உருவமே விதி; நம் நிழலே மதி!”

மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.

சபை கலைந்தது.

கேள்வியாளர் மட்டும் வெளியே நின்று கொண்டிருந்தார்.

“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே! மதியால் விதியை ஆராய்ச்சி செய்ய முடியும், ஆட்சி செய்ய முடியாது.” என்றபடி ஞானியார் நடந்தார். கேள்வியாளர் பின் தொடர்ந்தார்.

நன்றி :- கவிஞர் கண்ணதாசன்.
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
SP.VR சுப்பையா, கோயமுத்தூர் - 641 012
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!