Tuesday, August 30, 2016

கட்டுரை: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரனுக்குத் தெரியாதா?


கட்டுரை: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரனுக்குத் தெரியாதா?

எட்டாம் எண் பலரையும் பயம் கொள்ள வைக்கும் எண்ணாகும்.
ஆனால் எட்டில் ஏராளமான நன்மைகளும் உண்டு.

இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் Facebookகை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் முதன் எழுத்து எண் கணிதத்தின்படி எட்டிற்கு உரிய எண்ணாகும். Facebook என்ற சொல்லில் உள்ள
எழுத்துக்களும் எட்டு ஆகும். அதன், அதாவது அந்தச் சொல்லின்
கூட்டு எண்ணும் எட்டு ஆகும்

Facebook = F (8) + A (1) + C (3) + E (5) + B (2) + O (7) + O (7) + K (2) = 35
இந்த 35ன் தனி எண் = 35 = 3 +5 + 8

எட்டு எண்பது வலிமை மிக்க எண்ணாகும் (Powerful Number)

Bombay = B (2) + O (7) + M (4) + B (2) + A (1) + Y (1) = 17 = 8

1995ஆம் ஆண்டு அதன் பெயர் மாற்றப்பெற்ற பிறகு அதன்
அதிர்ஷ்டங்களும் எட்டிலிருந்து வேறு ஒரு எண்ணுக்குப் போனது!

Mumbai = M (4) + U (6^) + M (4) + B (2) +A (1) + I (1) = 18

எழுதும்போது எல்லா எண்களும் மேலே துவங்கி கீழே முடியும்.
எட்டு மட்டும் மேலே துவங்கி மீண்டும் மேலேயே முடியும்.
நாம் பயணத்தை எங்கே துவங்கினோமோ அங்கேயே அந்தப்
பயணம் முடியும் என்பதை அது குறிக்கும்!

முகம் பார்க்கும் கண்ணாடியில் மற்ற எண்களெல்லாம் மாற்றத்துடன் தெரியும். எட்டு மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தெரியும்!

எட்டைக் குறுக்கு வசத்தில் இரண்டாக உடைத்தால் இரண்டு
ஜீரோக்கள் (சைபர்கள்) கிடைக்கும். வாழ்க்கை இறுதியில் ஜீரோ
என்பதை அது உணர்த்தும். எண் எட்டு சனியினுடைய எண். அவன் ஆயுள்காரகன் அதை மனதில் வையுங்கள்.

எட்டாம் எண் பல தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், மகான்களுடன் தொடர்புள்ள எண்ணாகும்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாவர். 4 +4 = 8 அவருடைய பெயருக்கான எழுத்துக்களின் மதிப்பும் எட்டுதான். Barack Obama = 212132 72141 = 26 = 8

நட்சத்திர வரிசையில் பார்த்தீர்கள் என்றால், சனி பகவானுடைய நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவைகளின்
வரிசை எண் 8, 17, 26 ஆகும் அவைகளின் தனி எண்ணும் எட்டுதான்

மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206 = 8

மனித மூளையின் ஆற்றலுக்கு வேலை கொடுக்கும் செஸ் ஆட்டத்தில் உள்ள காய்களின் எண்ணிக்கை எட்டு. பெரிய காய்கள் +  சிப்பாய்கள் எட்டு
ஆட்டத்தின் தளத்திலும் எட்டு கட்டங்கள், எட்டு வரிசைகள்

ஒரு காகிதத்தை எட்டு தடவைக்கு மேல் உங்களால் மடிக்க முடியாது. வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்

உலக அளவில் ஆங்கில மொழி ஏன் இத்தனை பிரபலம்?

அந்த மொழியில் உள்ள எழுத்துக்கள் 26 = 8

ஆங்கில மொழியில் உள்ள  F & P ஆகிய இரண்டு எழுத்துக்களுக்கும்
உரிய எண் 8. அந்த எழுத்துக்களுடன் துவங்கும் பல சொற்கள் நம் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டதாக இருக்கும். நம்மைக் கலக்குவதாக இருக்கும்!

Fail, Fate, False, Fire, Fatal, Fear, Fever, Fight, Foreign, Frustration, Fracture, Future (worry of future), Freedom, Fall,Fast,Famine,Fibroid, etc.

Pass, Pacemaker(for heart),  Poverty,Pathetic, Pain,Panic, Proud, Perversion, Philosophy, Police, Poor, Prison,Poison,Phishing, Prohibition,Patient (in hospital) and Punishment etc.

இந்திய சுதந்திரம் அடைந்த தினம்

15-8-1947 = 35 = 8
அன்றைய நட்சத்திரம் பூசம் = வரிசையில் எட்டாவது நட்சத்திரம் =
அத்துடன் அது சனி பகவானின் நட்சத்திரம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது அஷ்டமி திதியன்று. அது திதிகளின் வரிசையில் எட்டாவது திதியாகும். அத்துடன் அவர் தனது
பெற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாவார்.

கவியரசர் கண்ணதாசனும் தன்னுடைய பேற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாவார்

இந்த ஆக்கம், இணையத்தில் முன்பு படித்த கட்டுரை ஒன்றுடன் என்
சொந்த சரக்கையும் கலந்து கொடுத்துள்ளதாகும்
----------------------------------------
சரி, தலைப்பிற்கு வருகிறேன்

யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?

தெரியும். எண் கணிதத்தில் அது விவரமாகத் தெரியாது. ஆனால் ஜோதிடத்தில் அது பளிச்’சென்று தெரியும்

அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
SP.VR. சுப்பையா

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”அண்ணே, கட்டுரைக்கும் முகப்பில் உள்ள படத்திற்கு என்ன சம்பந்தம்?”

”கண்ணா, அவர் திருநீறு பூசியிருக்கும் அழகைப் பார்த்தாயா? அதை உனக்குச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் அந்தப் படம். திருநீற்றை அப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்!”
=======================================================

Friday, August 26, 2016

சிறுகதை: காசின் அருமை

சிறுகதை: காசின் அருமை
SP.VR. சுப்பையா, கோயம்புத்தூர் - 641 012
----------------------------------------------
அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 9
                   
(எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது ஒன்பதாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. அதை நான் விரிவு படுத்தி என் நடையில் எழுதியுள்ளேன்)

காசின் அருமை

தன் மகன் கருப்பஞ்செட்டி காசருமை தெரியாமல் வளர்வதில் சாத்தப்ப செட்டியாருக்கு மிகுந்த வருத்தம். சிக்கனமும், சேமிப்பும் நகரத்தார்களின் இரண்டு கண்கள் என்று அவர் அடிக்கடி சொல்வார். சிறுகக்கட்டிப் பெருக வாழவேண்டும் என்பார்.

அனால் அவர் மகன் கருப்பஞ்செட்டியிடம் அதெல்லாம் எடுபடவில்லை! அவன் நின்று பேசமாட்டான். காது கொடுத்து எதையும் கேட்க மாட்டான்.
அவன் தாயார் சிகப்பி ஆச்சி, அவனைச் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்கள். சாத்தப்ப செட்டியார் தம்பதிகளுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து, அவன் பிறந்ததால் ஆச்சிக்கு அப்படியொரு பாசம். கண்ணை மறைக்கும் பாசம்.

காலம் 1941ம் ஆண்டு. ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்கள் தயாரித்து வெளிவந்த சபாபதி என்னும் திரைப்படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலம். அந்தப் படத்தில் வரும் கதாநாயகனைப் போலவேதான் நம் கருப்பஞ்செட்டியும் இருந்தான். குணம், அறிவு என்று இரண்டிலுமே அச்சு அசலாக அப்படியேதான் இருந்தான். தோற்றத்தில் மட்டும் வாட்டசாட்டமாக இருப்பான். வயது 16. படிப்பு எட்டாம் வகுப்போடு சரி. அதற்குப் பிறகு படிப்பு ஏறவில்லை.

அப்போது இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்ததால், நகரத்தார்கள் புதிதாக எதையும் செய்யாமால் இருப்பதை வைத்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சாத்தப்ப செட்டியாரின் வீடு நகரச் சிவன் கோயிலுக்கு அருகில் கீழக்கொரட்டியார் தெருவில் இருந்தது. பங்கு போட்டுக்கொள்ள யாருமில்லை. முழு வீடும் அவருடையதுதான். கீழ ஊருணிக் கரையில் ஒரு சின்ன தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தின் முன் பகுதியில் இருந்த தகரக் கொட்டகையில் ஒடு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். சீமை ஓடுகள். தேக்கு மரச் சட்டங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு வேண்டிய சாமான்கள். உதவிக்கு நான்கு வேலையாட்களை வைத்திருந்தார்.

நாட்டு ஓடு, நம் கணினி கீ‍போர்டில், எண் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகியவற்றில் இருக்கும் round bracket போன்ற வடிவில், அரை அடிக்கும் சற்று குறைவான‌ நீளத்தில் இருக்கும். இன்று இந்த வகை ஓடுகளைக் காண்பது அறிதாய் இருக்கிறது.

சீமை ஓடு, வளைந்து நெளிந்து, அளவில் பரீட்சை அட்டை போல‌, இப்போழுது இருக்கும் அநேக வீடுகளில் இருப்பது.

இவ்விருவ‌கை ஓடுக‌ளும் ஆர‌ஞ்சு நிற‌த்தில், க‌ண்க‌ளைக் க‌வ‌ரும் வ‌ண்ண‌மாக‌ இருக்கும். புதிதாக‌ வேய்ந்த‌ ஓடுக‌ள் நாள் செல்ல‌ச் செல்ல‌, ம‌ழையிலும், வெய்யிலிலும் ஆங்காங்கே க‌ருத்திருக்கும். 'வெய்யில்ல அலையாதப்பா கருத்துருவ' என்று இதைப் பார்த்து தான் சொன்னார்களோ என்னவோ! ஆரஞ்சில் கருமையும், ஒருவகையில் அழ‌கைக் கூட்டும் வித‌மாக‌வே இருக்கும்.

ஆனால் சாத்தப்பண்ணனின் ஒரே கவலை அவருடைய மகன்தான். கடைக்கு வந்து தொழிலைக் கற்றுக் கொள்ளப்பா என்றபோது முடியாது என்று மறுத்துவிட்டான். நீ சும்மா திட்டிக் கொண்டே இருப்பாய், உங்களிடம்  யார் வேலை பார்ப்பது என்று சொல்லிவிட்டான். வேறு இடத்திலும் வேலைக்குச்  செல்ல மறுத்துவிட்டான். இரண்டு வருடம் போகட்டும் என்று அவரும் விட்டு விட்டார்.

அவனுக்கு நிறைய நண்பர்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிப் போய்விடுவான். மாலை ஆறு அல்லது ஏழு மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பி வருவான். ஒரு புத்தம் புது ராலி  சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். சைக்கிள்கள் எல்லாம் வெள்ளைக்காரன் தேசத்தில் இருந்துதான் அப்போது வரும். டைனமோ, காற்று அடிக்கும் பம்ப் என்று எல்லா உபரி சாதனங்களையும் கொண்ட அற்புதமான சைக்கிள் அது.

காலையில் கிளம்பு முன் சாத்தப்ப அண்ணனிடம் வந்து நிற்பான். முகப்புப் பெட்டகசாலையில் இருந்து முதல் நாள் குறிப்புக்களைச் சிட்டையில் ஏற்றிக்கொண்டிருக்கும் அவர் நிமிர்ந்து பார்த்தவுடன் கையை நீட்டுவான். அன்றையக் கைச் செலவிற்கு, அதாவது பாக்கெட் மணி கேட்டு நிற்பான். அவரும் எழுதாத ஒப்பந்தப்படி ஒரு ஒத்த ரூபாய்க் காசை எடுத்துக் கொடுத்து அனுப்பி விடுவார்.

தங்கம் பவுன் 38 ரூபாய் விற்ற காலம் அது. ஒரு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் அதிக மதிப்புடையது. ரூபாய்க்குப் பதினாறு அணாக்கள். ஒரு அணாவிற்கு காலைப் பலகாரம் சாப்பிடக்கூடிய காலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மாதம் 15 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் கிடைக்கும்  காலம் அது.

அவன் இப்படிக் காசருமை தெரியாமல் தினமும் ஒரு ரூபாயை வீணடிக்கின்றானே என்று வருத்தப்படுவார்.

ஒருநாள் அதற்கு முடிவு கட்ட விரும்பியவர், அவனிடம் பேச்சுக் கொடுத்தார்:

“நான் ஒரு சின்ன வேலை சொல்கிறேன். செய்கிறாயா?”

அவன் பதில் சொன்னான். “முடிந்த வேலை என்றால் செய்கிறேன்”

ஒரு ஒத்த ரூபாய்க் காசை அவன் கையில் கொடுத்தவர், சொன்னார்.” இந்தக் காசை நம் வீட்டுக் கிணற்றில் போட்டு விட்டு வா”

அவன் சற்றுக் கூட யோசிக்கவில்லை, தயங்கவில்லை. தங்கள் வீட்டு முகப்பில் இருக்கும் கிணற்றில் போட்டு விட்டு உடனே திரும்பி வந்தான்.

வந்து நின்றவனிடம் தொடர்ந்து சொன்னார் அவர்: “நாளை முதல் உன் கைச் செலவிற்கு நான் இரண்டு ரூபாய் தருகிறேன். ஆனால் இன்று நீ வெளியே சென்று சம்பாத்தித்து ஒரு ஒற்றை ரூபாயைக் கொண்டு வா பார்க்கலாம்”

“அவ்வளவுதானே, இன்று மாலைக்குள் ஒரு ரூபாய் சம்பாத்தியத்துடன் வருகிறேன்” என்று சொன்னவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டான்

*********************************

சொல்வது எளிது. ஆனால் செயல் படுத்துவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது கருப்பஞ் செட்டிக்கு வெளியே சென்றவுடன்தான் புத்தியில் உறைத்தது.

சில கூலி வேலைகளைச் செய்து அப்பணத்தைத் தேற்றிவிடலாம் என்று முடிவு செய்தவன், அடுத்த தெருவில் இருக்கும் ஒரு செல்வந்தர் வீட்டிற்குச் சென்று, அவரிடம் ஏதாவது வேலை தரும்படி கேட்டான்.

வயதுதான் 16 ஆனதே தவிர ஆள் தோற்றத்தில் வாட்ட சாட்டமாக இருபது வயது இளைஞன் போல இருப்பான்.

இவனை ஏற இறங்கப் பார்த்தவர், கார் ஒட்டத் தெரியுமா? என்று கேட்டார். அவர் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தன.

“தெரியாது” என்று சொன்னவன். கார்களைக் கழுவி சுத்தம் செய்து தருகிறேன். கூலியாக ஏதாவது கொடுங்கள் என்றான். பரிதாபப்பட்ட அவர் அந்த வேலையைச் செய்யும்படி பணித்து, அதற்கு வேண்டிய துணி, வாளி, ஆகியவற்றைக் கொடுத்ததோடு, தண்ணீர் பிடிக்கும் இடத்தையும் காட்டினார். ஒரு மணி நேரத்தில் அவற்றைச் செய்து முடித்தான். அவரும் அதற்குச் சன்மானமாக இரண்டு அணாக்களைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு கிளம்பியவன், கல்லுக்கட்டியில் இருந்த பெரிய மளிகைக் கடைக்குச் சென்று அதே போல ஏதாவது கூலி வேலை கொடுங்கள் என்றான். இவன் டிப்டாப்பாக இருப்பதைப் பார்த்துவிட்டு சந்தேகப் பட்ட கடைக்காரர்,” ஏம்ப்பா மூடை தூக்குவாயா? வெளியே வாகனத்தில் இருக்கும் பருப்பு மூட்டைகளை உள்ளே கொண்டு வந்து அடுக்க வேண்டும். செய்வாயா?” என்று கேட்டார்.

அதெல்லாம் செய்வேன் என்று சொன்னவன், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த வேலையைச் செய்து முடித்தான். கொஞ்சம் சிரமாமகத்தான் இருந்தது. ஆனால் மனதில் நுழைந்த வீம்பு காரணமாக அதைச் செய்து முடித்தான். மொத்தம் 20 மூட்டைகள். மூட்டைக்குக் காலணா வீதம் கடைக்காரன் 4 அணாக்களைக் கொடுத்தான்.

இப்படியாகத் தொடர்ந்து வேலை பார்த்ததில் மாலை 4 மணிக்குள் 15 அணாக்கள் சம்பாதித்துவிட்டான். உடல் களைத்து விட்டது. ஆனாலும் மன உறுதி காரணமாகத் தாக்குப் பிடித்து நின்றான். மதியம் சாப்பாட்டிற்காக செலவழித்த ஒரணா போக மீதி பதினான்கணாக்கள் பைக்குள் இருந்தன. இன்னும் இரண்டணாக்கள் வேண்டுமே?

பேருந்து நிலையத்திற்குச் சென்றான். அங்கே அப்போது வந்திறங்கிய பெரியவரிடம் இருந்த பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களைப் பார்த்துவிட்டு, அய்யா இவற்றை நான் தலைச்சுமையாகக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் இறக்கி வைக்கிறேன்  என்றான். அவரும் பேரம் பேசியவர் கடையில் சம்மதித்து முத்துப் பட்டணத்தில் உள்ள தன்னுடைய வீடுவரை அவனைத் தூக்கிவர விட்டவர். கடைசியில் ஒரு அணாவைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தார். திரும்பவும் பேருந்து நிலையம். மீண்டும் இது போல ஒரு தலைச் சுமை. ஒரணாக் கூலி.

அப்பாடா என்றிருந்தது அவனுக்கு. ஒரு ரூபாய் சேர்ந்து விட்டது!

வீட்டிற்குத் திரும்பும் வழியில் கொப்புடையம்மன் கோவில் வாசலில் இருந்த கடையில், சில்லறைகளைக் கொடுத்து விட்டு ஒற்றை ரூபாய்க் காசாக அதை மாற்றி வைத்துக் கொண்டு, பாதி ஓட்டமும் பாதி நடையுமாக மாலை ஆறரை மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

வந்தவுடன், வீட்டில் முகப்பில் அமர்ந்திருந்த தன் தந்தையாரிடம், கையை நீட்டி காசைக் காட்டினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த அவன் தந்தையார், சொன்னார்: ”இந்தக் காசைக் கொண்டு போய் நம் வீட்டுக் கிணற்றில் வீசி விட்டு வா!”

அவனுக்குக் கடுப்பாகி விட்டது. அத்துடன் கோபமும் தலைக்கு ஏற, காட்டுக் கூச்சலாய் கத்த ஆரம்பித்துவிட்டான்:

”என்ன அப்பச்சி? உங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா? எத்தனை இடங்களில் கூலி வேலை செய்து இந்தக் காசை சம்பாதித்தேன் தெரியுமா? நான் பட்ட கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியுமா? இதைக் கொண்டு போய் கிணற்றில் வீசச் சொல்கிறீர்களே?”

”இன்று காலையில் நான் கொடுத்த காசை மட்டும் சத்தமில்லாமல் வீசி விட்டு வந்தாயே? இப்போது எதற்கு இத்தனை சத்தம்?”

அவனுக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. மெளனமாக நின்றான்.

அவனுடைய தந்தை மெல்லிய குரலில்  அவனுக்குப் புரியும்படி சொன்னார்: “யாருக்கும் காசு சும்மா வராது. கஷ்டப்பட்டால்தான் வரும். நான் காலையில் உன்னிடம் கொடுத்த பணமும், தினமும் உன்னிடம் கொடுக்கும் பணமும் நான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதுதான். வேலையில் நஷ்டம் வராது. ஆனால் தொழிலில், வியாபாரத்தில் நஷ்டமும் வரும் தெரியுமா? பல சமயங்களில் கடனாகக் கொடுத்த சரக்கிற்குப் பணம் வராது. அதை வராத கணக்கில், நஷ்டக் கணக்கில்தான் எழுத வேண்டியதிருக்கும் தெரியுமா? நான் ஒன்றும் உட்கார்ந்து கொண்டு, காலை ஆட்டிக்கொண்டு சம்பாதிக்கவில்லை. ஓடியாடி கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கின்றேன். அதை முதலில் நீ புரிந்து கொள்!”

தந்தை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவனைச் சம்மட்டியால் அடிப்பதைப் போன்று இருந்தது.

எல்லாம் பிடிபட ஆரம்பித்தது.

“நாளை முதல் நானும் உங்களுடன் நம் கடைக்கு வருகிறேன். எனக்கு ஒரு வேலை கொடுங்கள். என்ன வேலை வேண்டுமென்றாலும் கொடுங்கள்!” என்று அவன் சொல்லச் சொல்ல அவனுடைய தந்தை பிரமிப்பிற்கு ஆளானார். தன்னுடைய ஒரு நாள் சோதனை ஓட்டம் அவனுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது குறித்து சந்தோஷத்திற்கும் ஆளானார்.

அவனுக்குக் காசின் அருமை ஒரே நாளில் தெரிந்ததைக் குறித்து  மிகவும் சந்தோஷத்திற்கு ஆளானார். அனுபவம்தான் பெரிய வாத்தியார் என்பதையும் அதுதான் எந்த மனிதனையும் மாற்றக்கூடியது என்பதையும் தன் மகன் மூலம் அவர் உணர்ந்து கொண்டார்.

*****************************************

Tuesday, August 23, 2016

அதிரடிக் கதை: காத்திருந்த சிக்கல்!

அதிரடிக் கதை: காத்திருந்த சிக்கல்!
SP.VR.சுப்பையா, 
-------------------------------------------
இந்தக் கதையை கடைசி வரி வரை விடாமல் படியுங்கள் ஒரு அதிர்ச்சியும், ஒரு ஆச்சரியமும் ஒருசேரக் காத்திருக்கிறது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

மனைவி ஊரில் இல்லை. மேல் பயிற்சி வகுப்பிற்காக புதுதில்லி சென்றிருக்கிறாள். திரும்பி வர 15 தினங்களாகும். அவள் வேலை பார்க்கும் தனியார்

நிறுவனம் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருந்தது.

அவளைச் செம்பட்டு விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டுத் திரும்பிய அவளுடைய கணவன் கனகராஜன் ஒரு குறுகுறுப்போடு இருந்தான்.

ஒருவருடமாக அடக்கி வைத்திருந்த தன்னுடைய ஆசையை இன்று நிறைவேற்றிக் கொள்வது என்று முடிவு செய்திருந்தான்.

என்ன ஆசை?

வேறு என்ன? ஆசை தீரத் தண்ணியடிக்க வேண்டும், அவ்வளவுதான்!

திருமணத்திற்கு முன்பு விளையாட்டாக எல்லாத் தப்புக்களையும் செய்து கொண்டிருந்தவனை பெண்போலீஸ் போல மிரட்டிக் களை எடுத்து
வைத்திருந்தாள் அவன் மனைவி சாரதா!

அவளுக்குத் தெரிந்தால் கண்ணை நோண்டி விடுவாள்

இப்போதுதான் அவள் இல்லையே!

வீட்டிற்கு வந்தவன் நன்றாக ஒரு குளியல் போட்டான். பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு புறப்பட்டான். அலமாரியில் இருந்த நூறு ரூபாய்க் கட்டில்
பத்து நோட்டுக்களை உருவி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.மணி இரவு 8.30ஐத் தொட்டிருந்தது.

வீட்டைப் பூட்டும் போதுதான் யோசித்தான்.

காரை எடுத்துக் கொண்டு போகலாமா? வேண்டாம் என்று முடிவு செய்தான்.

திரும்பி வரும்போது வழியில் காக்கிகள் நின்று, வாயை ஊதிக்காட்டு என்றால் வம்பாகிவிடும்!

சரி வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து அடித்தால்? அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பக்கத்துவீட்டு டாபர்மேன் பெரிசு எப்போது வேண்டு
மென்றாலும் வுந்து கதவைத் தட்டி ”இந்த சி.டியைப் பாருங்கள். பானா ஸீரிசில் வந்த படம் - சூப்பராக இருக்கும்” என்று சொல்லி மோப்பம் பிடித்துப்

பற்ற வைத்துவிடும் அபாயம் உண்டு!

அதனால் போனோமா, அடித்தோமா, வந்து கவுந்தடித்துப் படுத்தோமா என்று இருப்பதே நல்லது!

புறப்பட்டான், காத்திருக்கும் சிக்கலை அறியாமல்!
++++++++++++++++++++++++++++

கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோட்டில் அவனுடைய வீடு. ஒரு பர்லாங் தூரம் நடந்து வந்தால் பிரதான சாலை குறுக்கிடும். ஆட்டோ வைத்துப்

போய்க் கொள்ளலாம் என்று நடந்தான்.

பிரதான சாலைக்கு வந்த பிறகுதான் முடிவு மாறியது.

எதற்கு ரெம்ப தூரம் போக வேண்டும். பேருந்து நிலையம் அருகில்தான். அந்தப் பகுதியில் இல்லாதா பார்களா?

ராஜாளி ஹோட்டல் அருகில் ஒரு பாரைத் தேர்ந்தெடுத்து உள்ளே போனான்.

சற்று இருட்டாக இருந்த டேபிளைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான்.

அவனுடைய பேஃவரைட் ஸ்காட்ச் விஸ்கிதான். மெதுவாக ரசித்துக் குடித்தான். சைட் டிஷ் வறுத்த முந்திரி. சிக்கன் கபாப்.

மூன்று லார்ஜ்கள் முடிந்து, ஒரு ஸ்மாலுக்கு ஆர்டர் கொடுக்கும்போதுதான் பியரெர் சொன்னார்.” சார், எங்கள் பார் ஆரம்பித்து, இன்றுடன் ஒரு

வருடம் ஆகிறது!”

"அதெற்கென்ன?”

“இன்று இங்கே வரும் கஸ்டமர்கள் அனைவருக்கும் ஒரு லார்ஜ் ஃப்ரீ!”

“அடப்பாவி, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை, கொண்டு வா!” என்றவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து முழுதாக ஊதி முடிப்பதற்குள்

அடுத்த லார்ஜ் வந்துவிட்டது. அதையும் குடித்து முடித்தான். மணி 10.30ஐத் தொட்டிருந்தது.

இனியும் உட்கார்ந்திருக்கக் கூடாது என்று நினைத்தவன் எழுந்தான். அதற்குள் அங்கே ரெஸ்டாரென்ட்டில் ஆர்டர் கொடுத்திருந்த உணவுப்
பொட்டலங்கள் நீட்டாக பேக் செய்யப்பட்டு அவன் கைக்கு வந்து சேர்ந்தது. பில்லை செட்டில் பண்ணிவிட்டு, அதைக் கையில் எடுத்துக் கொண்டு

வெளியே வந்தான்.

வெளியே காற்று இதமாக இருந்தது. மழை வரும்போல இருந்தது வந்தால் வரட்டும்.

எதிரே ஒரு டாஸ்மாக் கடையைப் பார்த்தவன், எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குவாட்டர் பேக்பைப்பர் விஸ்கியை வாங்கிப் பையில் வைத்துக்

கொண்டான்.

அதற்குள் ஊர் அடங்கிப் போயிருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை! வலது பக்கம் உள்ள சாலையில் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்தால்

வில்லியம்ஸ் சாலை வந்து விடும்

உடம்பெல்லாம் முறுக்கேறி ஜிவ்வென்றிருந்தது. நடந்தவன் வில்லியம்ஸ் சாலை கிராஸிற்கு வந்து விட்டான்.

இரண்டு பக்கமும் சாலையை அடைத்துக்கொண்டு ஏராளமான மரங்கள்.

கருங்'கும்மென்றிருந்தது.

அப்போதுதான் அது நடந்தது.

ஒரு மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி இரண்டு அடிகள் முன்னே வைத்து, இவனை நோக்கித் திரும்பி உற்றுப் பார்த்தாள்.

இவனும் அப்போது தான் அவளைக் கண்டவன் உற்று நோக்கினான்.

பெண் சூப்பராக இருந்தாள். செக்கச் செவேல் என்று சிவந்த நிறம். நயன்தாரா தோற்றத்தில் இருந்தாள். வயது 23 அல்லது 24 இருக்கலாம். காற்றில்

அவளுடைய ஷிபான் சேலை படபடத்துக் கொண்டிருந்தது. மிதமான மேக்கப்பில் இருந்தாள். உதட்டுச் சாயம் அசத்தலாக இருந்தது. கையில் லெதர்

ஹாண்ட்பேக் வைத்திருந்தாள். பெரிய இடத்துப் பெண்னைப் போன்றும் தோன்றினாள். நெறிகெட்ட பெண்னைப் போன்றும் தோன்றினாள்.

சரக்கு உள்ளே போன முறுக்கில், அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உடம்பும் மனதும் கனகராஜனைப் படுத்த ஆரம்பித்தன!.

பழைய வாலிப நினைப்பில் அவனையும் அறியாமல் சட்டென்று கேட்டுவிட்டான்:

“வர்றியா?”

அவள் மறு பேச்சில்லாமல் ‘ம்' என்று சொன்னதுதான் அதைவிடப் பெரிய அதிர்ச்சி

கனகராஜனுக்கு நம்ப முடியாத அதிர்ச்சியாக அது இருந்தது

வீட்டில் ஒன்பதாயிரம் ரூபாய் பாக்கி வைத்து விட்டு வந்தது நினைவிற்கு வர, சும்மா கேட்டு வைத்தான்.

“எவ்வளவு பணம் வேண்டும்?”

“பணமெல்லாம் வேண்டாம். நன்றாகக் கம்பெனி கொடுத்தால் போதும்”

“படு குஷியாகி விட்ட கனகராஜன், கேட்டான்,“சாப்பிட்டாயா?”

“இல்லை, இனிமேல்தான்!”

“என்னிடம் இருக்கிறது, வீடு அருகில் தான், வா முதலில் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு மற்றதைப் பேசுவோம்”

தழையத் தழைய அவனைத் தொட்டவாறு அவள் நடக்க, தன் மனதிற்குள் ஆயிரம் நிலவுகள் கண் சிமிட்ட கனராஜனும் அவளுடன் சேர்ந்து நடந்தான்.

ஆமாம், எதிர் கொள்ளப் போகும் ஆபத்தை அறியாதவனாக நடந்தான் கனகராஜன்!
---------------------------------------------------------------
வீடெங்கும் மல்லிகை வாசம் ஆளைக் கிறங்கடித்தது.

அவள் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 11.30ஐத் தொட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் எல்லோருமே off ஆகியிருந்தார்கள். இருந்தாலும் கனகராஜன்
முன்னெச்சரிக்கையாக பூனையைப்போல சத்தமின்றி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தான்.

அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள், சமையலறைக்குச் சென்று, கையில் இருந்த குவாட்டரை வைத்து மேலும் ஒரு சுற்று சுருதி ஏற்றிக் கொண்டான்.

தன் மனைவியின் நைட்டியொன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் சமையலறைக்குச் சென்று திரும்புவதற்குள், அவள் நைட்டிக்கு

மாறியிருந்தாள்

நைட்டியில் அவள் இன்னமும் அழகாக இருந்தாள். தேவதைபோல இருந்தாள்.

இன்னும் சற்று நேரத்தில் சொர்க்கமே தன் வசப்படப் போகும் மகிழ்ச்சியில் இருந்த கனகராஜன், அடுத்த காட்சிக்குப் போகும் முனைப்பில்

செயல்பட்டான்.

தன்னுடைய படுக்கையறைக்கு அவளை அழைத்துச் சென்றவன் கட்டிலைக் காட்டி உட்கார் என்றான்.

படுக்கை அறை 11 x 15 பெரிய அறை. ஸ்பிளிட் ஏர்கண்டிஷனாரால் குளிரூட்டப் பட்டிருந்தது.

உட்கார்ந்தவள் அருகில் அவனும் சென்று அமர்ந்தான்.

அவள் முகம் இன்னும் சிவந்திருந்தது. கூச்சமாக இருக்கும் என்று நினைத்தவன் கேட்டான்:

”விளக்கை அனைத்து விடட்டுமா?”

“ம்” என்றாள்

எழுந்தவனைத் தடுத்து உட்கார வைத்துவிட்டு “நான் அனைக்கிறேன்!” என்று சொன்னவள், அதை இருந்த இடத்தில் இருந்தே செயல் படுத்தினாள்.

அவளுடைய வலது கை பதினைந்தடி நீளம் நீண்ண்ண்ண்ண்டு... அறையின் குறுக்காகச்  சென்று, கோடியில் இருந்த ஸ்விட்சை அனைத்தது!

(முற்றும்)
--------------------------------------------------------------------
40 ஆண்டுகளுக்கு முன்பு என் இனிய நண்பர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு பக்கப் பேய்க் கதை இது. ஸ்டோரி ஒன் லைனராக என்

மனதில் இருந்தது. அதை உங்களுக்காக எனது எழுத்து நடையில் (in my writing style) விவரித்து எழுதியுள்ளேன்.
===================================================