Tuesday, August 23, 2016

அதிரடிக் கதை: காத்திருந்த சிக்கல்!

அதிரடிக் கதை: காத்திருந்த சிக்கல்!
SP.VR.சுப்பையா, 
-------------------------------------------
இந்தக் கதையை கடைசி வரி வரை விடாமல் படியுங்கள் ஒரு அதிர்ச்சியும், ஒரு ஆச்சரியமும் ஒருசேரக் காத்திருக்கிறது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

மனைவி ஊரில் இல்லை. மேல் பயிற்சி வகுப்பிற்காக புதுதில்லி சென்றிருக்கிறாள். திரும்பி வர 15 தினங்களாகும். அவள் வேலை பார்க்கும் தனியார்

நிறுவனம் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருந்தது.

அவளைச் செம்பட்டு விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டுத் திரும்பிய அவளுடைய கணவன் கனகராஜன் ஒரு குறுகுறுப்போடு இருந்தான்.

ஒருவருடமாக அடக்கி வைத்திருந்த தன்னுடைய ஆசையை இன்று நிறைவேற்றிக் கொள்வது என்று முடிவு செய்திருந்தான்.

என்ன ஆசை?

வேறு என்ன? ஆசை தீரத் தண்ணியடிக்க வேண்டும், அவ்வளவுதான்!

திருமணத்திற்கு முன்பு விளையாட்டாக எல்லாத் தப்புக்களையும் செய்து கொண்டிருந்தவனை பெண்போலீஸ் போல மிரட்டிக் களை எடுத்து
வைத்திருந்தாள் அவன் மனைவி சாரதா!

அவளுக்குத் தெரிந்தால் கண்ணை நோண்டி விடுவாள்

இப்போதுதான் அவள் இல்லையே!

வீட்டிற்கு வந்தவன் நன்றாக ஒரு குளியல் போட்டான். பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு புறப்பட்டான். அலமாரியில் இருந்த நூறு ரூபாய்க் கட்டில்
பத்து நோட்டுக்களை உருவி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.மணி இரவு 8.30ஐத் தொட்டிருந்தது.

வீட்டைப் பூட்டும் போதுதான் யோசித்தான்.

காரை எடுத்துக் கொண்டு போகலாமா? வேண்டாம் என்று முடிவு செய்தான்.

திரும்பி வரும்போது வழியில் காக்கிகள் நின்று, வாயை ஊதிக்காட்டு என்றால் வம்பாகிவிடும்!

சரி வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து அடித்தால்? அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பக்கத்துவீட்டு டாபர்மேன் பெரிசு எப்போது வேண்டு
மென்றாலும் வுந்து கதவைத் தட்டி ”இந்த சி.டியைப் பாருங்கள். பானா ஸீரிசில் வந்த படம் - சூப்பராக இருக்கும்” என்று சொல்லி மோப்பம் பிடித்துப்

பற்ற வைத்துவிடும் அபாயம் உண்டு!

அதனால் போனோமா, அடித்தோமா, வந்து கவுந்தடித்துப் படுத்தோமா என்று இருப்பதே நல்லது!

புறப்பட்டான், காத்திருக்கும் சிக்கலை அறியாமல்!
++++++++++++++++++++++++++++

கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோட்டில் அவனுடைய வீடு. ஒரு பர்லாங் தூரம் நடந்து வந்தால் பிரதான சாலை குறுக்கிடும். ஆட்டோ வைத்துப்

போய்க் கொள்ளலாம் என்று நடந்தான்.

பிரதான சாலைக்கு வந்த பிறகுதான் முடிவு மாறியது.

எதற்கு ரெம்ப தூரம் போக வேண்டும். பேருந்து நிலையம் அருகில்தான். அந்தப் பகுதியில் இல்லாதா பார்களா?

ராஜாளி ஹோட்டல் அருகில் ஒரு பாரைத் தேர்ந்தெடுத்து உள்ளே போனான்.

சற்று இருட்டாக இருந்த டேபிளைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான்.

அவனுடைய பேஃவரைட் ஸ்காட்ச் விஸ்கிதான். மெதுவாக ரசித்துக் குடித்தான். சைட் டிஷ் வறுத்த முந்திரி. சிக்கன் கபாப்.

மூன்று லார்ஜ்கள் முடிந்து, ஒரு ஸ்மாலுக்கு ஆர்டர் கொடுக்கும்போதுதான் பியரெர் சொன்னார்.” சார், எங்கள் பார் ஆரம்பித்து, இன்றுடன் ஒரு

வருடம் ஆகிறது!”

"அதெற்கென்ன?”

“இன்று இங்கே வரும் கஸ்டமர்கள் அனைவருக்கும் ஒரு லார்ஜ் ஃப்ரீ!”

“அடப்பாவி, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை, கொண்டு வா!” என்றவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து முழுதாக ஊதி முடிப்பதற்குள்

அடுத்த லார்ஜ் வந்துவிட்டது. அதையும் குடித்து முடித்தான். மணி 10.30ஐத் தொட்டிருந்தது.

இனியும் உட்கார்ந்திருக்கக் கூடாது என்று நினைத்தவன் எழுந்தான். அதற்குள் அங்கே ரெஸ்டாரென்ட்டில் ஆர்டர் கொடுத்திருந்த உணவுப்
பொட்டலங்கள் நீட்டாக பேக் செய்யப்பட்டு அவன் கைக்கு வந்து சேர்ந்தது. பில்லை செட்டில் பண்ணிவிட்டு, அதைக் கையில் எடுத்துக் கொண்டு

வெளியே வந்தான்.

வெளியே காற்று இதமாக இருந்தது. மழை வரும்போல இருந்தது வந்தால் வரட்டும்.

எதிரே ஒரு டாஸ்மாக் கடையைப் பார்த்தவன், எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குவாட்டர் பேக்பைப்பர் விஸ்கியை வாங்கிப் பையில் வைத்துக்

கொண்டான்.

அதற்குள் ஊர் அடங்கிப் போயிருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை! வலது பக்கம் உள்ள சாலையில் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்தால்

வில்லியம்ஸ் சாலை வந்து விடும்

உடம்பெல்லாம் முறுக்கேறி ஜிவ்வென்றிருந்தது. நடந்தவன் வில்லியம்ஸ் சாலை கிராஸிற்கு வந்து விட்டான்.

இரண்டு பக்கமும் சாலையை அடைத்துக்கொண்டு ஏராளமான மரங்கள்.

கருங்'கும்மென்றிருந்தது.

அப்போதுதான் அது நடந்தது.

ஒரு மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி இரண்டு அடிகள் முன்னே வைத்து, இவனை நோக்கித் திரும்பி உற்றுப் பார்த்தாள்.

இவனும் அப்போது தான் அவளைக் கண்டவன் உற்று நோக்கினான்.

பெண் சூப்பராக இருந்தாள். செக்கச் செவேல் என்று சிவந்த நிறம். நயன்தாரா தோற்றத்தில் இருந்தாள். வயது 23 அல்லது 24 இருக்கலாம். காற்றில்

அவளுடைய ஷிபான் சேலை படபடத்துக் கொண்டிருந்தது. மிதமான மேக்கப்பில் இருந்தாள். உதட்டுச் சாயம் அசத்தலாக இருந்தது. கையில் லெதர்

ஹாண்ட்பேக் வைத்திருந்தாள். பெரிய இடத்துப் பெண்னைப் போன்றும் தோன்றினாள். நெறிகெட்ட பெண்னைப் போன்றும் தோன்றினாள்.

சரக்கு உள்ளே போன முறுக்கில், அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உடம்பும் மனதும் கனகராஜனைப் படுத்த ஆரம்பித்தன!.

பழைய வாலிப நினைப்பில் அவனையும் அறியாமல் சட்டென்று கேட்டுவிட்டான்:

“வர்றியா?”

அவள் மறு பேச்சில்லாமல் ‘ம்' என்று சொன்னதுதான் அதைவிடப் பெரிய அதிர்ச்சி

கனகராஜனுக்கு நம்ப முடியாத அதிர்ச்சியாக அது இருந்தது

வீட்டில் ஒன்பதாயிரம் ரூபாய் பாக்கி வைத்து விட்டு வந்தது நினைவிற்கு வர, சும்மா கேட்டு வைத்தான்.

“எவ்வளவு பணம் வேண்டும்?”

“பணமெல்லாம் வேண்டாம். நன்றாகக் கம்பெனி கொடுத்தால் போதும்”

“படு குஷியாகி விட்ட கனகராஜன், கேட்டான்,“சாப்பிட்டாயா?”

“இல்லை, இனிமேல்தான்!”

“என்னிடம் இருக்கிறது, வீடு அருகில் தான், வா முதலில் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு மற்றதைப் பேசுவோம்”

தழையத் தழைய அவனைத் தொட்டவாறு அவள் நடக்க, தன் மனதிற்குள் ஆயிரம் நிலவுகள் கண் சிமிட்ட கனராஜனும் அவளுடன் சேர்ந்து நடந்தான்.

ஆமாம், எதிர் கொள்ளப் போகும் ஆபத்தை அறியாதவனாக நடந்தான் கனகராஜன்!
---------------------------------------------------------------
வீடெங்கும் மல்லிகை வாசம் ஆளைக் கிறங்கடித்தது.

அவள் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 11.30ஐத் தொட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் எல்லோருமே off ஆகியிருந்தார்கள். இருந்தாலும் கனகராஜன்
முன்னெச்சரிக்கையாக பூனையைப்போல சத்தமின்றி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தான்.

அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள், சமையலறைக்குச் சென்று, கையில் இருந்த குவாட்டரை வைத்து மேலும் ஒரு சுற்று சுருதி ஏற்றிக் கொண்டான்.

தன் மனைவியின் நைட்டியொன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் சமையலறைக்குச் சென்று திரும்புவதற்குள், அவள் நைட்டிக்கு

மாறியிருந்தாள்

நைட்டியில் அவள் இன்னமும் அழகாக இருந்தாள். தேவதைபோல இருந்தாள்.

இன்னும் சற்று நேரத்தில் சொர்க்கமே தன் வசப்படப் போகும் மகிழ்ச்சியில் இருந்த கனகராஜன், அடுத்த காட்சிக்குப் போகும் முனைப்பில்

செயல்பட்டான்.

தன்னுடைய படுக்கையறைக்கு அவளை அழைத்துச் சென்றவன் கட்டிலைக் காட்டி உட்கார் என்றான்.

படுக்கை அறை 11 x 15 பெரிய அறை. ஸ்பிளிட் ஏர்கண்டிஷனாரால் குளிரூட்டப் பட்டிருந்தது.

உட்கார்ந்தவள் அருகில் அவனும் சென்று அமர்ந்தான்.

அவள் முகம் இன்னும் சிவந்திருந்தது. கூச்சமாக இருக்கும் என்று நினைத்தவன் கேட்டான்:

”விளக்கை அனைத்து விடட்டுமா?”

“ம்” என்றாள்

எழுந்தவனைத் தடுத்து உட்கார வைத்துவிட்டு “நான் அனைக்கிறேன்!” என்று சொன்னவள், அதை இருந்த இடத்தில் இருந்தே செயல் படுத்தினாள்.

அவளுடைய வலது கை பதினைந்தடி நீளம் நீண்ண்ண்ண்ண்டு... அறையின் குறுக்காகச்  சென்று, கோடியில் இருந்த ஸ்விட்சை அனைத்தது!

(முற்றும்)
--------------------------------------------------------------------
40 ஆண்டுகளுக்கு முன்பு என் இனிய நண்பர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு பக்கப் பேய்க் கதை இது. ஸ்டோரி ஒன் லைனராக என்

மனதில் இருந்தது. அதை உங்களுக்காக எனது எழுத்து நடையில் (in my writing style) விவரித்து எழுதியுள்ளேன்.
===================================================

No comments: